பாலியல் குற்றங்களின் தண்டனை குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் - குமரி மாவட்ட போலீசார் ஏற்பாடு

குமரி மாவட்ட போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் பாலியல் குற்றங்களின் தண்டனை குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகர்கோவில்:

நாடு முழுவதும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க குற்ற செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்றும், இதுதொடர்பான எச்சரிக்கை துண்டு பிரசுரங்களும் குமரி மாவட்ட போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிமாறன், வேணுகோபால் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பஸ், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இந்த எச்சரிக்கை துண்டு பிரசுரங்களை ஒட்டினர். குழந்தைகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை வினியோகம் செய்தனர்.

அதில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு தூக்கு தண்டனை கூட விதிக்கலாம். பாலியல் குற்றம் தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். புகாருக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொள்ளலாம். இத்தகைய புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com