அம்பேத்கார் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்- கடையடைப்பு

திண்டிவனம் அருகே சிறுவாடியில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. #DisrespectAmbedkarStatue #TindivanamShutDown
அம்பேத்கார் சிலை அவமதிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்- கடையடைப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சிறுவாடி பகுதியில் உள்ள மரக்காணம்-திண்டிவனம் மெயின் ரோட்டில் அம்பேத்கார் சிலை உள்ளது.

இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் செருப்புமாலை அணிவித்து விட்டு சென்றுவிட்டனர். இன்று காலை இதை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் மரக்காணம்-திண்டிவனம் சாலையில் திரண்டனர்.

பின்னர் அம்பேத்கார் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், பிரம்ம தேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தலைமையிலான போலீசார் மற்றும் மரக்காணம் தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அம்பேத்கார் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அம்பேத்கார் சிலைக்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமராவும் பொருத்த வேண்டும். என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களிடம் அம்பேத்கார் சிலையை அவமதித்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மற்ற கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். இதை ஏற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com