டி.வி.பார்ப்பதில் தம்பியுடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

டி.வி. பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டி.வி.பார்ப்பதில் தம்பியுடன் தகராறு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த குமரவேலின் மகள் தீபிகா (வயது 19). இவர் தனது பெற்றோருடன் அருகில் உள்ள பிளச்சிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருடைய தம்பி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதால் தீபிகா தனது தம்பியுடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். இரவு 7 மணி அளவில் டி.வி. பார்ப்பதில் அக்காள்-தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தீபிகா அங்கிருந்து எழுந்து, அருகில் உள்ள அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

நீண்டநேரமாகியும் மகள் வெளியே வராததால் பெற்றோர், அந்த அறையின் கதவை தட்டியும், தீபிகாவை அழைத்தும் பார்த்தனர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தீபிகா கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தபடி பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அக்காள்-தம்பிக்குள் டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com