பேரிடர் மேலாண்மை செயல் திட்டம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு குறித்து செயல்திட்டம் தயார் செய்வது தொடர்பாக கலெக்டர் சிவஞானம் ஆலோசனை நடத்தினார்.
பேரிடர் மேலாண்மை செயல் திட்டம்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
Published on

விருதுநகர்:

பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு குறித்து செயல்திட்டம் தயார் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் தெரிவித்ததாவது:–

பேரிடர் ஆபத்து குறைப்புக்காக 2015–ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் செண்டாய் நகரில் நடைபெற்ற 3–வது ஐக்கிய நாடுகள் உலக மாநாட்டில் 2030–ம் ஆண்டில் எதிர்கொள்ளப்பட வேண்டிய 7 இலக்குகளைக் கொண்ட பேரிடர் ஆபத்துகள் உருவாவதை தடுப்பது, பேரிடர் ஆபத்துகளை பெருமளவு குறைப்பது என்ற நோக்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி ஆபத்துகளைப் புரிந்து கொள்ளுதல், ஆபத்து நிர்வாகத்தை வலுப்படுத்துதல், ஆபத்துகளை எதிர்கொள்வதில் முதலீடு செய்தல், ஆபத்துகளை எதிர்கொள்ளும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல், பேரிடர்களுக்கு பின் சிறப்பான முறையில் மீளுதல், பேரிடர்களில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்தல், பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையை குறைத்தல், பொருளாதார இழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளை பெருமளவு குறைத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பேரிடர்களை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறு நிகழாவண்ணம் தடுப்பதை இலக்காக கொண்டு 2022–ம் ஆண்டு வரையிலான முதல் ஐந்தாண்டு மற்றும் 2027–ம் ஆண்டு வரையிலான இரண்டாவது ஐந்தாண்டுகளில் இலக்கை அடைவதற்கான திட்டங்களை வகுத்து அதன்படி செயல்பட்டு 2030–ம் ஆண்டுக்குள் பேரிடர் அபாயங்களை முழுவதுமாக குறைக்கும் நோக்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயல் திட்டம் தயார் செய்யப்பட உள்ளது.

இதற்கு அரசின் பல்வேறு துறைகளின் மூலமும் தன்னார்வலர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். மாவட்டத்தில் கடந்த காலங்களில் நிகழ்ந்த பேரிடர்களினால் பெறப்பட்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்காலத்தில் ஏற்படும் பேரிடர்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கருத்துகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலிங்கம் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com