

மதுரை:
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால், மாவட்ட கோர்ட்டுகளில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை. இந்தநிலையில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாவட்ட கோர்ட்டுகளில் நேரடி வழக்கு விசாரணை செய்வது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதி முடிவு எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-
மதுரை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் வருகிற 22-ந்தேதி முதல் நேரடி வழக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, மேலூர் கோர்ட்டை தவிர, மதுரை மாவட்டத்தில் உள்ள தாலுகா கோர்ட்டுகளுக்கு பொருந்தும். இந்த கோர்ட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட அளவு வக்கீல்களை மட்டுமே கோர்ட்டுகளுக்குள் அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட சில வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான பட்டியல் வெளியிடப்படும். வக்கீல் சங்கங்கள், வக்கீல் அறைகள், உணவகம் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கோர்ட்டுகளிலும் மனுக்களை போடுவதற்கு தனி பெட்டி வைத்து, அவசர வழக்குகளை மறுநாள் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம். காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே பணி நேரம். வேலைநாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் வழக்கு ஆவணங்களை திரும்ப பெற முடியும். முக கவசம் இன்றி கோர்ட்டு வளாகத்தில் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வக்கீல்கள் கருப்பு அங்கி அணிய வேண்டாம். ஐகோர்ட்டின் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறைகள் வருகிற 22-ந்தேதியில் இருந்து அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.