திண்டுக்கல் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட குழந்தைகளை படத்தில் காணலாம்.
கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட குழந்தைகளை படத்தில் காணலாம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சிறுமலை பசலி கிராமத்தை சேர்ந்தவர் குப்பாண்டி என்கிற பாலு. விவசாயி. அவரது மனைவி செல்லம்மாள் (வயது 28). இவர்களுக்கு பொன்னர் (6), பெரியக்காள் (2) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

நேற்று இரவும் வழக்கம் போல் 2 பேருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இதனால் மனமுடைந்த செல்லம்மாள் தற்கொலை செய்வது என்று முடிவு செய்தார். பின்னர் தான் மட்டும் இறந்தால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்ககூடும் என கருதி அவர்களையும் கொன்று விட தீர்மானித்தார்.

இன்று காலை செல்லம்மாள் தனது மனதை கல்லாக்கி 2 குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு வந்தார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசினார். இதனை அங்கு உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த செல்லம்மாள் கிணற்றில் குதித்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தனர். மலை கிராம மக்கள் செல்லம்மாளை மீட்டனர். அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசாரும் விரைந்தனர். 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com