திண்டுக்கல் மாவட்டத்தில் 2100 போலி பயனாளிகள்- அதிகாரிகள் தகவல்

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2100 போலி பயனாளிகள் பணம் பெற்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்கி கணக்கு
வங்கி கணக்கு
Published on

திண்டுக்கல்:

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் போலி பயனாளிகளை கண்டறிந்து வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டனர்.

மேலும் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதால் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் வரை மாவட்டத்தில் 1 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் நிதி உதவி பெற்று வந்தனர். ஆவணங்கள் குளறுபடியால் தகுதி உள்ள விவசாயிகள் சிலர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பட்டாக்கள் வெவ்வேறு பெயரில் இருந்தும் ஒரே ரேசன் கார்டில் பெயர் இருந்ததால் அவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட சோதனையில் 824 பேர் போலி பயனாளிகள் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து 900 பேரிடம் விசாரணை நடத்தினர்.

மத்திய அரசு இந்த திட்டத்தில் விவசாயிகள் எளிதில் பயன்பெறும் வகையில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு 5 மாதங்களில் 10,910 விவசாயிகள் பயன்பெற விண்ணப்பித்தனர். அவர்கள் மனு விசாரிக்கப்பட்டு சிலருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டது. தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத் தில் 2100 பேர் போலி பயனாளிகள் என்பதும் முதல் கட்ட தவணையை இவர்கள் பெற்றதும் தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிசான் திட்ட மோசடியில் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் மேலும் பல போலி பயனாளிகள் கண்டறிய கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com