திண்டுக்கல் மாநகராட்சியை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாநகராட்சியை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மொத்தம் 140 ஸ்டாண்டுகளில் 2,225 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் ஆட்டோ ஸ்டாண்டுகளை வரைமுறை படுத்தும் விதமாக 98 ஸ்டாண்டுகளுக்கு மட்டும் அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளனர்.

இது ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக கூறி ஆட்டோ தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. அழகர் சாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ஜெயமணி, மனிதநேய மக்கள் கட்சி தொழிற்சங்க பிரிவு நிர்வாகி யூசூப் மவுலானா, எஸ்.டி.டி.யூ. அப்துல் லத்தீப் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷம் எழுப்பினர் இது குறித்து அவர்கள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து ஆலோசிக்காமல் 98 ஸ்டாண்டுகளுக்கு மட்டும் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு ஸ்டாண்டுக்கும் ரூ. 5,000 வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்றும், வருடத்துக்கு ரூ.500 வரி செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் இன்சூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்ட நிலையில் இது போன்று வரி விதிப்பதால் ஆட்டோ டிரைவர்கள் பிழைப்பு நடத்துவது மிகவும் கடினம். இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும், மனு அளித்துள்ளோம்.

நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com