திண்டுக்கல் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் மோதல்

திண்டுக்கல் அருகே சாலையோர வியாபாரிகள் திடீரென மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூரில் பாலத்தின் அடியில் சிலர் ஆக்கிரமித்து காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு, காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.

சந்தை கூடும்போது அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் அடியில் காய்கறி வியாபாரிகள் சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் அவதியடைவதால் அடிக்கடி வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இன்று சந்தை என்பதால் காலையில் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். பாலத்தின் அடியில் கடைகள் அமைப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் திடீர் என கும்பலாக மோதிக் கொண்டனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தெறித்து ஓடினர். சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார் விரைந்து வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

மேலும் பாலத்தின் அடியில் யாரும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்ய கூடாது என எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. சாலை விசாலமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் போலீசார் இவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com