

சென்னையில் கவர்னர் வித்யாசாகர் ராவை நேற்று தினகரன் சந்தித்து பேசினார். அப்போது தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகர் தனபாலை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தரப்பினர் மற்றவர்கள் யாரும் பழனிசாமி அணிக்கு தாவக்கூடாது என்பதால் புதுவை சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்த தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அதிரடியாக இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அதன்படி எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கர்நாடக மாநிலத்தின் மலை வாசஸ்தலமான குடகு மலையில் உள்ள ‘‘விண்ட் பிளவர்’’ என்ற சொகுசு விடுதியில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து புதுவை சொகுசு விடுதியை நேற்று இரவு காலி செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு சொகுசு பஸ்சில் புறப்பட்டு அனைவரும் நேற்று இரவு பெங்களூரு வந்தடைந்தனர். அவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி வரவேற்று அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அங்கு காலை உணவு சாப்பிட்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மைசூரு வழியாக குடகு மலையில் உள்ள கூர்க் பகுதியில் உள்ள விண்ட் பிளவர் சொகுசு விடுதிக்கு செல்கின்றனர். இது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
19 எம்.எல்.ஏ.க்கள் பஸ்சில் புதுவையில் இருந்து மைசூரு வழியாக குடகு மலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு செல்கிறோம். இன்று மாலைக்குள் அங்கு சென்றடைந்து விடுவோம்.
தினகரன் தலைமையில் நாளை நடக்கும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம். அதற்காக பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பின்னர் மீண்டும் விமானம் மூலம் பெங்களூருவுக்கு எம்.எல்.ஏ.க்கள் திரும்பி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்திபன் கூறுகையில், பஸ்சில் குடகு மலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம் என்றார்.
கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டப்போது, அரசியல் நிமித்தம் காரணமாக வெற்றிவேல் எம்.எல்.ஏ. நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் டெல்லியில் தங்கி இருக்கிறார்கள். 19 எம்.எல்.ஏ.க்கள் நேற்று புதுச்சேரி சொகுசு விடுதியில் இருந்து பஸ்சில் புறப்பட்டு இரவு பெங்களூரு வந்து ஓட்டலுக்கு தங்கினார்கள். இன்று காலை மைசூரு மாவட்டம் குடகு மலையில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இவர்கள் முன்பதிவு செய்துள்ள குடகு மலை கூர்க் பகுதியில் உள்ள விண்ட் பிளவர் சொகுசு விடுதியில் நீச்சல் குளம், ஆயுர் வேதிக் மசாஜ் பார்லர், சைவ, அசைவ உணவு வகைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.