

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை மாற்ற வலியுறுத்தியும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.கள் 19 பேர் தனித்தனியாக மனு அளித்தனர். இந்த மனு மீது இன்னும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று நேரில் விளக்கம் அளிக்க உள்ளதாக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செலவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “அனைவரும் செல்லவில்லை. 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் சென்று விளக்கம் அளிக்க உள்ளோம். கண் துடைப்புக்காக இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். சென்ற கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை” என்றார்.