

அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கட்சியின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட 60 பதவிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த அமைச்சர்கள் விமர்சித்து பேட்டி அளித்தனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத கட்சியின் துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை நியமிப்பது அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இந்த நிர்வாகிகள் நியமனம் செல்லாது என்று தெரிவித்தார்.
அப்போது அவர் அருகே இருந்த திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், தன்னிடம் கேட்காமல் பதவி அறிவித்த தினகரன் அவசரப்பட்டுவிட்டார் என்றும் அவர் கொடுத்த கட்சி பொறுப்பை ஏற்கமாட்டேன் என்றும் கூறினார்.
இது அ.தி.மு.க. அம்மா அணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் தவிர கட்சி பதவி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பதவி தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்சியின் அமைப்பு செயலாளராக தினகரனால் அறிவிக்கப்பட்ட மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமியை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார். சுமார் 3½ மணி நேரம் அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் வெளியே வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்த சந்திப்பு குறித்து பதில் அளிக்கையில், முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாக கூறிவிட்டு சென்று விட்டார். சாமியும் நட்பு ரீதியாக சந்தித்து பேசியதாக பதில் அளித்தார்.
இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் மேலூர் சாமியை சந்தித்தது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
டி.டி.வி.தினகரனால் அமைப்பு செயலாளராக மேலூர் சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தினகரனின் தீவிர ஆதரவாளரான சாமி தலைமையில் வருகிற 14-ந்தேதி மேலூரில் தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பெரும் திரளாக பங்கேற்கும் வகையில் தினகரன் ஆதரவாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். சாமியை சந்தித்து பேசிய உதயகுமார் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாம் நடந்து கொள்ளவேண்டும். கட்சி பொறுப்பு மற்றும் தினகரன் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம்.
தினகரன் அறிவித்த அமைப்பு செயலாளர் பதவியை தற்போது நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதுதான் கட்சி நலனுக்கு சரியாக இருக்கும். எனவே உங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டதாக தெரிகிறது.
ஆனால் ஆர்.பி.உதயகுமாரிடம் இதுகுறித்து எந்த உறுதியையும் மேலூர் சாமி அளிக்காததால் அந்த சந்திப்பு தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இதன் பின்னர் மேலூர் சாமி நிருபர்களிடம் கூறுகையில், கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அனைவரிடமும் ஒப்புதல் பெற்றுதான் கட்சி பதவியை வழங்கி உள்ளார். தினகரனை பொறுத்தவரை அவர் முதல்-அமைச்சராக இல்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி கொடுத்துதான் அவர் துணைப் பொதுச் செயலாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது இல்லை.
இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அ.தி. மு.க.வை சேர்ந்தவர்தான். எங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் விரைவில் பேசி தீர்க்கப்படும்.
சசிகலா, தினகரன் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவிக்கு கனவில்கூட வந்திருக்க முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமி மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் நாடகங்களில் வரும் பபூன் மாதிரி பேசி வருகிறார் என்றார்.
டி.டி.வி.தினகரன் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.வை விவசாய பிரிவு இணைச் செயலாளராக அறிவித்தார். இதனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் ஏற்க மறுத்து பேட்டி அளித்த ஏ.கே.போஸ், தற்போது திடீர் பல்டி அடித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் பதவி கிடைப்பதே பெரிய விசயம். டி.டி.வி.தினகரன் என்னிடம் தொலைபேசியில் பேசிதான் எனது ஒப்புதலோடு அந்த பதவியை எனக்கு கொடுத்தார். ஆனால் எனது உடல்நிலையை காரணம் காட்டி கட்சி பதவியை ஏற்பதில் எனக்கு தர்மசங்கடமான சூழ்நிலை இருந்தது. அதனால் தினகரன் அறிவித்த பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று முன்பு கூறி இருந்தேன்.
ஆனால் வெளியில் சொல்ல முடியாத சில நிர்பந்தங்கள் காரணமாகவே அதனை கூறவேண்டியது இருந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எனது நிலையை டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து அவரிடம் விளக்கம் அளித்து விட்டு கட்சி பொறுப்பை ஏற்று செயல்பட தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.