

பெங்களூரு:
பெங்களூரு சிறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை சிலர் திட்டமிட்டு அழித்து விட்டதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
நான் கடந்த 10-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தேன். சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறைப் பகுதிக்கும் சென்று சோதனை செய்தேன்.
ஒரு அதிகாரியாக பார்வையிட்டு, உயர் அதிகாரிக்கு அறிக்கை கொடுத்தேன். இந்த விஷயத்தில் நான் காவல்துறை விதிகளையோ, சிறைத்துறை சட்ட திட்டங்களையோ மீறவில்லை.
ஆனால் இந்த விவகாரத்தில் என்னை குற்றவாளி போல காட்ட முயற்சி நடக்கிறது. நான் முதலில் ஊடகத்திடம் பேசவில்லை. டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ்தான் பேசினார். அதன் பிறகே நானும் ஊடகத்திடம் சென்றேன்.
ரூ.2 கோடி லஞ்சம் கை மாறிய விஷயத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உயர்மட்ட விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்.
இதில் என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அனைவர் மீதும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூர் சிறைக்கு நான் சென்றிருந்த போது எனது செல்போன் சரியாக இயங்கவில்லை. எனவே சிறையில் உள்ள ஹேண்டி கேமிராவை எடுத்துச் சென்றேன். சசிகலா அறையை நான் அந்த கேமிராவில் பதிவு செய்தேன்.
சிறப்பு சமையல் அறையையும் படம் பிடித்தேன். பிறகு அந்த கேமிராவை ஒரு அதிகாரியிடம் கொடுத்து, அதில் உள்ள காட்சிகளை பதவிறக்கம் செய்து பென் டிரைவ்வில் பதிவேற்றம் செய்து தரும்படி கூறி கொடுத்தேன்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டிருந்தது. ஹேண்டி கேமிராவில் எந்த பதிவும் இல்லாமல் இருந்தது.
சிறைத்துறையில் எனக்கு கீழ் உள்ள சில அதிகாரிகளே எனக்கு எதிராக உள்ளனர். அவர்கள்தான் திட்டமிட்டு சசிகலாவுக்காக கட்டப்பட்டிருந்த சமையல் அறையை நான் கேமிராவில் படம் பிடித்திருந்ததை அழித்து விட்டனர்.
என்றாலும் என்னிடம் சில ஆதாரங்கள் உள்ளது. அது பற்றி ஓரிரு நாட்களில் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.க்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.