

கும்பகோணம்:
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு கட்சியினரும் நிவாரண உதவி அளித்தனர்.
இதற்கிடையே தமிழக அரசு கூடுதல் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று கூறி பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.5 லட்சம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கை நடத்திய வக்கீல் தமிழரசன் என்பவர் 94 குழந்தைகளின் பெற்றோரிடமும் பூர்த்தி செய்யப்படாத செக்கை ஏற்கனவே பெற்றிருந்தார்.
அதில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வீதம் 94 குழந்தைகளின் பெற்றோர்களின் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்தார். சுமார் 2 கோடி அளவில் வக்கீல் தமிழரசன் மோசடி செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
வக்கீல் தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், அவரிடமிருந்து பணத்தை மீட்டு தரும்படியும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் 94 குழந்தைகளின் பெற்றோர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வக்கீல் தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அப்போது பெற்றோர்கள், வக்கீல் தமிழரசனை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து சமரச படுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பெற்றோர்களின் திடீர் போராட்டத்தால் சுமார் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.