

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக அங்குள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ரூ.480 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 800 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய நிறுவனங்களுக்கு 500 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷியா, நியூசிலாந்து, கென்யா உள்ளிட்ட 162 நாட்டு பிரதி நிதிகள் பங்கேற்கும் ராணுவ கருத்தரங்கும் நடைபெறுகிறது.
ராணுவ கண்காட்சியையொட்டி மகாபலிபுரம் கடற்கரை அருகே கடலில் வரிசையாக இந்திய போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சி தொடக்க விழாவையொட்டி போர்க்கப்பல்களில் இருந்து தேகஸ் ரக போர் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வீரர்கள் பறந்து சாகசம் நிகழ்த்தி காட்டினர். ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் வீரர்கள் தரை இறங்கியும் சாகசம் நிகழ்த்தினர்.