தேர்வை சரியாக எழுதாததால் டிப்ளமோ என்ஜீனியர் தற்கொலை

தர்மபுரி அருகே போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வை சரியாக எழுதாததால் டிப்ளமோ என்ஜீனியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வை சரியாக எழுதாததால் டிப்ளமோ என்ஜீனியர் தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டி அள்ளி அருகே உள்ள முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் குமார் (வயது 24).

இவர் டிப்ளமோ என்ஜினீயிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காததால் குமார் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக காவல் துறையில் உள்ள 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தார்.

இதையடுத்து போலீஸ் வேலையில் சேருவதே தனது இலக்கு என முழு மூச்சாக நினைத்து கடந்த 6 மாதங்களாக ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பயிற்சிகளையும், கோச்சிங் சென்டருக்கு சென்று எழுத்து தேர்வுகான பயிற்சியையும் எடுத்து வந்தார்.

2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குமார் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த அவர் ஒருவித பதட்டத்துடனும், சோகத்துடனும் இருந்தார்.

இதனால் மகன் குமாரிடம் ஏன்? சோகமாக இருக்கிறாய் என பெற்றோர் விசாரித்தபோது தான் தேர்வை சரியாக எழுதவில்லை என்றும், தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ? என பயமாக இருக்கிறது என்றும் கூறினார்.

பெற்றோர் நீ கவலைப்பட வேண்டாம். உனக்கு போலீஸ் வேலை கண்டிப்பாக கிடைக்கும் என ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் தாங்கள் தேர்வை நன்றாக எழுதியுள்ளோம் என குமாரிடம் சந்தோ‌ஷமாக கூறினர். பயிற்சி எடுத்தும் நீ ஏன்? சரியாக தேர்வை எழுதவில்லை என கேட்டதாகவும் தெரிகிறது.

ஊரில் உள்ள தனது நண்பர்கள் எல்லாம் தேர்வில் வெற்றி பெற்று விடுவார்கள். தான் பயிற்சி எடுத்தும் பலன் இல்லாமல் போய் விட்டதே என மனம் உடைந்தார்.

நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று குமார் தனது கழுத்தில் சேலையை மாட்டி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குமார் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது உடல் தர்மபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காலையில் தேர்வு எழுதிய அவர், மாலையில் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com