தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய்- குழந்தை பலி

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய்- குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட ஜோதியின் உறவினர்கள்.
மறியலில் ஈடுபட்ட ஜோதியின் உறவினர்கள்.
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், செங்கோடியை சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 11 மாதத்திற்கு முன்பு ஜோதி(வயது23) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது ஜோதி நிறைமாத கர்ப்பணியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜோதிக்கு திடீரென்று பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது.

உடனே அவரை பிரசவத்திற்காக அவரது கணவர் காந்தி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

அங்கு நேற்று மாலை மருத்துவர்களால் ஜோதிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது ஜோதிக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக ஜோதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோதி மற்றும் வயிற்றிலேயே இறந்து பிறந்த பெண் குழந்தையின் உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காந்தி கதறி அழுதார்.

இது குறித்து காந்தி தர்மபுரி டவுன் போலீசில் எனது மனைவிக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததாலும், அவர்களின் அலட்சியதாலும் தான், எனது மனைவி மற்றும் குழந்தையின் இறப்புக்கு காரணம் என்று புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜோதி இறந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று இரவு திரண்டனர்.

நேற்று அதிகாலை பிரவசத்திற்காக சேர்த்த ஜோதியை மாலை வரை சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் இழுத்தடித்து அதன் பிறகு பிரசவம் பார்த்தாலும், டாக்டர்களின் அலட்சியதால் தான் தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர் என்ற தகவல் உறவினர்களுக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இன்று காலை திரண்டு வந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது டாக்டர்களின் அலட்சியத்தால் தாயும், குழந்தையும் இறந்தது. இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. சுஜதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம், தாயும், குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலம்-தர்மபுரி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com