தர்மபுரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயம்

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
மாயம்
மாயம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி கண்மணி (வயது 29). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு கண்மணி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் கண்மணி வீடு திரும்பவில்லை. இது குறித்து ஸ்டாலின் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்மணி கிடைக்கவில்லை. அவர் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்டாலின் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கண்மணியை தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் டேக்கீஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகன் முபாரக் (வயது 29). இவர் கடந்த 9ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் முபாரக் வீடு திரும்பவில்லை. இது குறித்து முபாரக்கின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் முபாரக் கிடைக்கவில்லை. இதுகுறித்து முபாரக்கின் அண்ணன் அப்துல் சலீம் தர்மபுரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முபாரக்கை தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த குடுவம்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் முனிராஜ் (வயது17). சிறுவன் முனிராஜ் மதுரை மாவட்டம் கடம்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தான். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிவந்தார். பின்னர் மீண்டும் அவர் கடம்பூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் பாட்டி வீட்டிற்கும் செல்லவில்லை என்ற தகவல் முத்துவிற்கு தெரியவந்தது.

இதனால் பதறிப்போன அவர் பல இடங்களில் தனது மகன் முனிராஜை தேடிபார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமானது தெரியவந்தது. இது குறித்து முத்து தர்மபுரி டவுன்போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com