தருமபுரி பஸ் டெப்போவில் டிரைவர் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி பஸ் டெப்போவில் பெட்ரோல் ஊற்றி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் ஊற்றி டிரைவர் தீக்குளிக்க முயன்ற காட்சி.
பெட்ரோல் ஊற்றி டிரைவர் தீக்குளிக்க முயன்ற காட்சி.
Published on

தருமபுரி:

தருமபுரி புறநகர் பஸ் டெப்போவில் டிரைவராக பாளையன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தருமபுரியில் இருந்து பாலக்கோடு, ராயக் கோட்டை வழியாக ஓசூர் செல்லும் ஒரு அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார்.

இவர் ஓட்டி செல்லும் இந்த பஸ்சிற்கு தினமும் 115 லிட்டர் டீசல் நிரப்பியுள்ளார். ஆனால்  மாற்று டிரைவர் இதே பஸ்சை ஓட்டி சென்றால் நாள் ஒன்றுக்கு 95 லிட்டர் டீசல் மட்டும் செலவாகிறது. இது குறித்து  டெப்போவில் டீசல் நிரப்பும் ஊழியர் பாளையனிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் நீங்கள் அதிகாரியை சந்தித்து வழக்கத்தை விட டீசல் அதிகம் செலவு ஆகிறது என்று கூறிவிடுங்கள் என்று தகவல் தெரிவித்தார். 

நேற்றிரவு பாளையன் பஸ்சை டெப்போவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.  பின்னர் வெளியே சென்ற அவர் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் எடுத்து டெப்போவுக்குள் வந்தார். திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாளையன் என்பவர் ஓட்டி செல்லும் பஸ்சிற்கு நாள் ஒன்றுக்கு 115 லிட்டர் டீசல் செலவானது. ஆனால் அதே பஸ்சை வேறு டிரைவர் ஓட்டி சென்றால் 95 லிட்டர் டீசல் மட்டுமே செலவு ஆனது. பாளையன் கடந்த 3 நாட்களாக அந்த பஸ்சில் 50 லிட்டர் டீசல் கூடுதலாக நிரப்பினார். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதுகுறித்து நாங்கள் பாளையனிடம் கேட்டபோது நீங்கள் பஸ்சை ஓட்டி சென்றால் மட்டும் டீசல் செலவு அதிகம் ஏற்படுகிறது. ஆனால் மாற்று டிரைவர் ஓட்டி சென்றால் டீசல் எங்களுக்கு மிச்சம் தான் ஆகிறது. இதற்கு தகுந்த விளக்கம் வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அவர் நான் என்ன டீசலை விற்பனையா? செய்கிறேன் என்றார். நேற்றிரவு பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com