சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலையில் போராட்டங்கள் குறைந்ததால் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அப்பம், அரவணை விற்பனையும் உயர்ந்துள்ளது. #Sabarimala #Devotees
சபரிமலையில் நேற்று இருமுடி கட்டுடன் ஐப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
சபரிமலையில் நேற்று இருமுடி கட்டுடன் ஐப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

சபரிமலையில் பக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. வெளி மாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினர்.

சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்களுக்கு போலீசார் இடையூறு செய்யக்கூடாது. அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பவும் தடை விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் குழுவையும் நியமித்தனர்.

ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகள் குறைந்தன. போராட்டக்காரர்களும், சபரிமலையில் நடந்த போராட்டங்களை நிறுத்திக் கொண்டனர்.

அவற்றை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன்பு நடத்தி வருகிறார்கள். இதனால் சபரிமலையில் அமைதி திரும்பியது. இதற்கிடையே ஆய்வுக்கு சென்ற ஐகோர்ட்டு குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர்.

போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், ஐகோர்ட்டு குழுவின் திருப்திகர பேட்டிகளும் ஐயப்ப பக்தர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்கத்தொடங்கியது.

தொடக்க நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்ற நிலையில் கடந்த வாரம் முதல் 50 முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் அப்பம் விற்பனையும், உண்டியல் வசூலும் பல லட்சங்களை தாண்டும். இந்த ஆண்டு முதல் 15 நாட்களில் அப்பம், அரவணை விற்பனை, உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

கடந்த 3 நாட்களாக அப்பம் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிமாநில பக்தர்கள் வருகையால் உண்டியல் வசூலும் கணிசமாக உயரும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் இலவச ஓய்வு மையம் செயல்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. கோட்டயம், செங்கனூர் ரெயில் நிலையங்களில் 24 மணி நேரம் செயல்படும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 500 பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  #Sabarimala #Devotees

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com