திருவண்ணாமலை தீப திருவிழாவில் பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பாஸ் இல்லாத பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று வடக்கு மண்டல ஜஜி ஸ்ரீதர் கூறினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பரணி தீபத்தின் போதும், மகா தீபத்தின் போதும் கோவிலுக்குள் எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சாமி புறப்பாடின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், தேர் திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், மகா தீபத்தின் போது கோவிலில் முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் போன்றவற்றை கேட்டறிந்தார்.

மேலும் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருவதால், அவர்கள் வேகமாக சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி, தேவநாதன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

இது குறித்து வடக்கு மண்டல ஜஜி ஸ்ரீதர் கூறியதாவது:-

தீபத்தின்போது பாஸ் இல்லாத சாதாரண பக்தர்களையும் அதிக அளவு அனுமதிப்பது, தீபம் முடிந்து மறுநாள் 3-ந் தேதி கிரிவலம் வரும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் அருணாசலேசுவரரை தரிசிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com