வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

கெலமங்கலம், தளி ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
சாலை அமைக்கும் இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சாலை அமைக்கும் இடத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Published on

தேன்கனிக்கோட்டை:

கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பெட்டமுகிலாளம் முதல் பாலக்கோடு ரோடு சாஸ்திரமுட்லு வரை காலிகட்டம் வழியாக ரூ.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கவும், மேலூர் முதல் தொலுவ பெட்டா, குல்லட்டி வரை சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் கருத்துருக்கள் தயார் செய்து அரசு அனுப்பி அனுமதி பெற்று சாலை அமைக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து குல்லட்டி கிராமம் மற்றும் கவுனூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாலை அமைக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் சாலை வசதி குறித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடு்த்தனர். மேலும் யானைகள் ஊருக்குள் வராத வகையில் தடுக்க சோலார் மின் வேலி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து தளி ஒன்றியத்திற்குட்பட்ட உரிகம் முதல் பிலிக்கல் வரையும், உளிபெண்டா முதல் சூலகுண்டா வரையும் சாலை அமைக்க உள்ள இடங்கள் வனத்துறைக்கு உட்பட்டு இருப்பதால் கருத்துரு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்து உரிய அனுமதி பெற்று சாலை வசதிகள் அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் பிரபு, உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) பக்கான் ஜெகதீஸ் சுதாகர், வன சரக அலுவலர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் மாது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாராணி, ஹேமலதா, சென்னகிருஷ்ணன், தமிழரசன், ஒன்றிய பொறியாளர்கள் சம்பத், தமிழ், பெட்டமுகிளலாளம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com