மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது: தேவகவுடா

ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கியதாக சித்தராமையா சொல்கிறார். அவ்வாறு இருந்தும் காங்கிரஸ் வெறும் 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேவகவுடா
தேவகவுடா
Published on

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நோக்கத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி நிர்வாகிகளின் 4 நாட்கள் ஆலோசனை கூட்ட தொடக்க விழா நேற்று பெங்களூரு அருகே பிடதியில் உள்ள குமாரசாமியின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொண்டு அந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

சித்தராமையா எங்கள் கட்சி குறித்து தவறான பிரசாரம் செய்கிறார். இந்த தவறான பிரசாரம் செய்ய ஒரு எல்லை வேண்டாமா?. தான் எங்கிருந்து வந்தோம், எங்கு வளர்ந்தோம் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டாமா?. எங்கள் கட்சி, நேரத்திற்கு தக்கபடி காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவு வெளியான பிறகு எந்த கட்சியினர் எனது வீட்டிற்கு வந்தனர் என்பது கர்நாடக மக்களுக்கு தெரியும். அவனமானங்களை சகித்து கொண்டேன். அதை எதிர்கொண்டேன். லட்சக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் அந்த வேதனையை அனுபவித்துள்ளேன். நம்மை பார்த்து சிரிப்பவர்களுக்கு வருகிற சட்டசபை தேர்தலில் தக்க பதில் கொடுப்போம்.

கர்நாடகத்தில் தற்போது உள்ள அரசு யாரால் வந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கியதாக சித்தராமையா சொல்கிறார். அவ்வாறு இருந்தும் காங்கிரஸ் வெறும் 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நமது கட்சியை வீடு வீடாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும். சிலர், ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழித்துவிடுவதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த கட்சியை யாராலும் ஒழிக்க முடியாது.

காலம் வரும்போது, எங்கள் கட்சியை ஒழிக்க யாரெல்லாம் திட்டமிட்டு செயல்பட்டனர் என்பதை விவரமாக கூறுவோம். ஜனதா தளம் (எஸ்) கட்சியை காப்பாற்ற குமாரசாமி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதனால் தான் இந்த 4 நாட்கள் கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதை விட அடிமட்டத்திற்கு கட்சியை கொண்டு செல்ல முடியாது. இங்கு எடுத்து கூறப்படும் அம்சங்களை நீங்கள் மனதில் வைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும். நமது கட்சிக்கு கடவுளின் ஆசி உள்ளது. நான் கடைசி வரை போராடி கட்சியை காப்பேன்.

இவ்வாறு தேவகவுடா பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com