ஸ்டிரெச்சர் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளி கணவரை இழுத்துச் சென்ற பெண்

அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ஸ்டிரெச்சர் தராததால் நோயாளி கணவரை பெண் தரதரவென்று இழுத்து சென்றார். இந்த சம்பவம் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் கர்நாடக மந்திரி மன்னிப்பு கேட்டார்.
ஸ்டிரெச்சர் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளி கணவரை இழுத்துச் சென்ற பெண்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமீர்சாப் (வயது 75) என்பவர் மூச்சுத்திணறல், உடல் வீக்கம் உள்ளிட்ட நோய்களுக்காக கடந்த மாதம் 25-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும், எக்ஸ்-ரே எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியரிடம் அவரது மனைவி பக்மிதா ஸ்டிரெச்சர் (தள்ளு வண்டி) கேட்டார். ஆனால் அங்கு போதிய ஸ்டிரெச்சர் இல்லை. இதனால் பக்மிதா தனது கணவர் காலை பிடித்து எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் அறைக்கு இழுத்து சென்றார்.

இதனை பார்த்த மற்ற நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர்.

இதுகுறித்து தெரிய வந்ததும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அமீர்சாப்புக்கு ஸ்டிரெச்சர் வழங்கியது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு கர்நாடக மாநில மருத்துவ கல்வித்துறை மந்திரி சரண் பிரகாஷ்பாட்டீல் உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்காக கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ்குமார் மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சம்பவத்திற்காக நான் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com