

சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமாகியுள்ளது. திருவள்ளூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அவற்றை கண்காணித்து சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெங்கு கொசுக்கள் டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் போன்றவற்றில் தேங்கும் நீரில் இருந்து உற்பத்தியாகின்றன.
அதனால் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களை சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் கடைகள், நிறுவனங்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொது சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருந்து வருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் 2½ லட்சம் பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசுக்கள் பரவுவதற்கு காரணமாக இருக்கின்றவர்கள் மீது நட வடிக்கை ஒரு புறம் எடுத்து வந்தாலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கொசுக்கள் ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தற்போது ஈடுபட்டுள்ளனர். தாசில்தார் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் இருந்து தான் உற்பத்தியாகின்றன. சாக்கடை, கழிவு நீரில் இருந்து உருவாவது இல்லை. அதனால் வீடுகள், காலிமனைகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் மீது சுகாதாரத்துறையின் கவனம் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் விட அரசு அலுவலகங்களிலும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற பொருட்களால் தான் டெங்கு பரவுகிறது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியன் பொது சுகாதார நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் அரசு கட்டிட வளாகங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளில் இருந்து டெங்கு கொசுக்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பூச்சியியல் வல்லுனர்கள், பொது சுகாதார வல்லுனர்கள், நோய் வல்லுனர்கள், களப்பணியாளர்கள் என 10 பேர் இடம் பெற்றனர். ஒரு வாரம் நடத்திய ஆய்வில் வீடுகளை விட அரசு கட்டிடங்களிலும், தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலும், கொசு உற்பத்தி உருவாகக் கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்கள் 27.7 சதவீதம் இருப்பது தெரியவந்துள்ளது. வீடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு 5 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த குழுவினர் 1025 வீடுகள், 625 அரசு கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனை, பள்ளிகள், நகராட்சி அலுவலகம், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பல அரசு அலுவலக வளாகங்களில் நடத்திய ஆய்வில் ரெயில் நிலையங்கள், போன்றவற்றில் தான் 60 சதவீத கொசுக்கள் உற்பத்தியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய பொது சுகாதார சார்பாக தமிழக கிளை தலைவர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:-
கிரானைட் குவாரிகள், பாறை குழிகள் போன்ற மக்கள் போக முடியாத இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அரசு கட்டிடங்களில் 40 சதவீதம் டெங்கு கொசு புழுக்கள் உருவாகின்றன. வீடுகளில் கொசு உற்பத்தி குறைந்துவிட்டன. ஆனால் பொது இடங்களில் தான் கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது.
ரெயில் நிலையங்கள், யார்டு பகுதியில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாவது ஆய்வில் தெரிய வருகிறது. இந்த இடங்களை கூடுதலாக பணியாளர்களை நியமித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் நிலையங்களில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டிடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து தூய்மைபடுத்த வேண்டும். பயனற்று கிடக்கும் வாகனங்கள், தேவையற்ற பொருட்களை அகற்றினால் 15 நாட்களுக்குள் டெங்கு உற்பத்தி கட்டுப்படுத்த முடியும். இவற்றை ரெயில்வேத்துறை செய்யாமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.