

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்பதே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இது குறித்து சட்டமன்றத்தில் அர.சக்கரபாணி, செந்தில்குமார் ஆகியோர் பேசினர். 40 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது கேரளாவில் டெங்கு காய்ச்சல் உள்ளது. பழனி நகரம் கேரளாவுக்கு அருகில் இருப்பதாலும் பழனி கோவிலுக்கு கேரள பக்தர்கள் வருகை தருவதாலும் டெங்குவின் தாக்கம் இருக்க கூடும் என்று தெரிவித்தார்.
அமைச்சருக்கும் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து சபாநாயகர் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தார்.
டெங்கு குறித்த விபரம் புரியாமல் தமிழக அமைச்சர்கள் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருக்கின்றனர். டெங்குவால் உயிரிழப்பு குறித்த தகவலை தெரிவிப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்று தெரியவில்லை. அவர்கள் சுய நினைவை இழந்து பேசுகின்றனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் பன்றிக்காய்ச்சல் இருந்த போது அதனை போக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டதுடன் தடையில்லாமல் மருந்துகள் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம்.
தற்போதுள்ள அரசு டெங்குவைப்பற்றி கவலைப்படாத அரசாக உள்ளது. அவர்களுக்கு தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதிலும், வழக்குகளை சந்திக்கவும் மட்டுமே நேரம் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகள் டெங்கு வார்டுகளாகவே உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.