செங்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5-ம் வகுப்பு மாணவி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி
Published on

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம், அண்டபேட்டை, சொர்னப்பந்தல், கோட்டகுளம் நீப்பந்துறை பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கம் அருகே உள்ள நீப்பந்துறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தனஞ்செழியன் கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுஜாதா (வயது10) அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுஜாதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுஜாதாவுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குள்ள தனி வார்டில் சிகிச்சையில் இருந்த சுஜாதா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து நீப்பந்துறை கிராமத்தில் சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். மாணவி இறந்த சம்பவத்தால் அங்கு டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதே போல் செய்யாறு பகுதியிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. திருவோத்தூர், வெங்கட்ராயன்பேட்டை, புதுத்தெரு, கொடநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர்.

செய்யாறு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர்ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் குணமாகாத நிலையில் அவரை பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல கீழ்புதுபாக்கம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com