சென்னையில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு ஆதரவாக சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேராயர், ஆயர்கள், பாதிரியார்கள் பங்கேற்றனர்.
சென்னையில் பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு ஆதரவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.

இதில் சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், கருணை இல்ல நிறுவனர் ஆர்.வி.தாமஸ் உள்பட பாதிரியார்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தி.மு.க. செய்தித்துறை இணைச்செயலாளர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டு பாலேஸ்வரத்தில் சிறுபான்மையினரான கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ‘செயின்ட் ஜோசப் ஹாஸ்பைஸ் பார் டையிங் டெஸ்டிடியூட்’ எனும் இறக்கும் தறுவாயில் உள்ள ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மீது தேவையில்லா பழிகளையும், குற்றங்களையும் மதவாத சக்திகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. இந்த கருணை இல்லத்தில் எல்லா வித வசதிகளும் உள்ளன. மேலும் அரசிடம் இருந்து முறையான உரிமம் பெற்று உள்ளது. அதற்கான சான்றிதழ்களும் உள்ளன. தற்போது உரிம மறுபரிசீலனைக்காக விண்ணப்பித்து உள்ளார்கள். முறையான பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.

கருணை இல்லத்தில் இறந்தவர்களின் எலும்புகளை விற்பனை செய்வதாக அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர். இது அப்பட்டமான பொய். அப்படி ஒரு கொடுமையை எந்த கிறிஸ்தவனும் செய்யமாட்டான்.

கருணை இல்லம் மீது அவதூறு பரப்பி வரும் மதவாத சக்திகள், இந்த குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆவணங்களை வெளிப்படையாக வெளியிட முடியுமா? கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து வன்முறை மற்றும் அடக்குமுறை திணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமை மாறவேண்டும். இதுபோன்ற அவதூறு பரப்புகிறவர்களை அரசு தண்டித்து, உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com