டெல்லி டெஸ்ட்: இலங்கை 373 ரன்னில் ஆல்அவுட் - இந்தியா தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கில் 373 ரன்களில் இலங்கை ஆல்அவுட்டான நிலையில், இந்தியா 2-வது இன்னிங்சில் முதல் 2-விக்கெட்டை இழந்தது.
Published on

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதமும் (243), முரளி விஜய் சதமும் (155 ரன்) அடித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அந்த அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் சன்டிமால், முன்னாள் கேப்டன் மேத்யூஸ் சதம் அடித்தனர். மேத்யூஸ் 111 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சன்டிமால் 147 ரன்களுடனும், சன்டகன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது‌ ஷமி, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 180 ரன்கள் பின்தங்கிய நிலையில், கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது.

ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் சன்டிமால் 150 ரன்னை தொட்டார். 345 பந்துகளில் 18 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்

அதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். இலங்கை அணி 135.3 ஓவர்களில் 373 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது இந்தியாவின் ஸ்கோரைவிட 163 ரன் குறைவாகும்.

சன்டிமால் 164 ரன் குவித்தார். 361 பந்துகளில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா கைப்பற்றினார்.

163 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. முரளி விஜய்யும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த முரளி விஜய் 9 ரன்னில் அவுட் ஆனார். லக்மல் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 10 ஆக இருந்தது.

அடுத்து ரகானே களமிறங்கினார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடாததால் புஜாரா இடத்தில் ரகானே முன்னதாக களம் இறக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு இந்த முறையும் ஏமாற்றம் அளித்தது. 10 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு தவானுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து இருந்தது. தவான் 15 ரன்னிலும், புஜாரா 17 ரன்னிலும், ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com