டெல்லி வன்முறையின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டெல்லி வன்முறையின் போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஷாரூக் பதான் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
போலீசார் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் பதான்
போலீசார் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் பதான்
Published on

டெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

3 நாட்கள் நீடித்த இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வீடுகள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 

இதற்கிடையில், கடந்த 24-ம் தேதி ஜாபராபாத் - மஞ்பூர் பகுதியில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 

அப்போது போராட்டக்காரர்களில் சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த ஷாரூக் பதான் என்பவர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்றுகொண்டிருந்த போலீசாரை நோக்கி வேகமாக ஓடிவந்தான். 

மேலும், தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு துப்பாக்கிச்சூடும் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 

பின்னர் எதிர் தரப்பு போராட்டக்காரர்களை நோக்கி சுமார் 8 முறை துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

இதையடுத்து, போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் பதுங்கி இருந்த ஷாரூக்கை மார்ச் 3-ம் தேதி டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், ஷாரூக் தங்க இடமளித்த கலீம் அகமது மற்றும் அவருக்கு உதவிய இஸ்டியாக் மாலிக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் டெல்லி அழைத்துவந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய ஷாரூக் பதான் மற்றும் அவருக்கு உதவி செய்த கலீம் அகமது, இஸ்டியாக் மாலிக் ஆகிய மூன்று பேர் மீது டெல்லி போலீசார் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

350 பக்கங்களை கொண்ட அந்த குற்றப்பத்திரிக்கையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com