இரட்டை குழந்தைகள் விவகாரம்: டெல்லி மருத்துவமனை உரிமம் ரத்து - சுகாதார துறை மந்திரி உத்தரவு

இரட்டை குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக சம்ப்ந்தப்பட்ட மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து சுகாதார துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published on

புதுடெல்லி:

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 30-ம் தேதி ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை இறந்து பிறந்தது.

சில நிமிடங்களில் பிறந்த மற்றொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தையும் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தபோது அதன் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். 

உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருள்ள குழந்தை இறந்துவிட்டது என தவறாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். டெல்லி அரசும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

உயிருள்ள குழந்தையை இறந்தது என அறிவித்தது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இரண்டு டாக்டர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், இரட்டை குழந்தைகள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை சுகாதார துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஷாலிமார்பாக் பகுதியில் அமைந்துள்ள மேக்ஸ் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து சுகாதார துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com