ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதித்திருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
Published on

புதுடெல்லி:

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனுக்களை விசாரித்த சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை ஏப்ரல் 26-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தடை இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இவ்வழக்கு தொடர்பாக சிங்கப்பூரில் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் இன்னும் வந்து சேராததால் 4 வாரகால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

இதைதொடர்ந்து,  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை மே 6-ம்  தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்றைய தினம் இவ்வழக்கின் மறுவிசாரணை நடைபெறவுள்ளது. #AircelMaxisCase #PChidambaram #KartiChidambaram  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com