

மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் நேற்று காலை கல்லூரி மாணவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி நாரேலா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 2 பெண்கள் உட்பட 7 மாணவர்கள் காலை 9 மணிக்கு நடைபெற இருந்த தேர்வுக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. பஞ்சாபி பாக் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ராஜாட் என்ற மாணவர் காரின் டயரில் சிக்கி உயிரிழந்தார். மேலும் சான்சிட் சப்ரா, ரிது சிங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இருவரின் கண்களை தானம் செய்ய அவர்களது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிருக்கு போராடிய பிரனவ், கரிமா, ரிஷப், ராஜா உள்ளிட்ட மாணவர்களை போலீசார் மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கரிமா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 மாணவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.