காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஜம்மு காஷ்மீருக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
ஸ்ரீநகரை அடைந்த ராகுல் காந்தி
ஸ்ரீநகரை அடைந்த ராகுல் காந்தி
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளோம் என தெரிவித்திருந்தனர். ஆனால் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால் காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தலை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. திட்டமிட்டபடி இன்று மதியம் அவர்கள் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.

ராகுல் தலைமையில் சென்றுள்ள அந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபிஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், தி.மு.க.வின் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித்மேமன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத்யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீர் சென்றுள்ள ராகுல் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழுவை அம்மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அவர்களை மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com