

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதற்காக அங்குள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் ரூ.480 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 800 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய நிறுவனங்களுக்கு 500 அரங்குகள் ஒதுக்கப்பட் டுள்ளது.
இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷியா, நியூசிலாந்து, கென்யா உள்ளிட்ட 162 நாட்டு பிரதி நிதிகள் பங்கேற்கும் ராணுவ கருத்தரங்கும் நடைபெறுகிறது.
ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றுகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த ராணுவ உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ராணுவ உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
ராணுவ கண்காட்சியையொட்டி மகாபலிபுரம் கடற்கரை அருகே கடலில் வரிசையாக இந்திய போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சி தொடக்க விழாவையொட்டி போர்க்கப்பல்களில் இருந்து தேகஸ் ரக போர் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வீரர்கள் பறந்து சாகசம் நிகழ்த்தி காட்டினர். ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் வீரர்கள் தரை இறங்கியும் சாகசம் நிகழ்த்தினர்.
தொடர்ந்து ராணுவம் குறித்த பல்வேறு தகவல்களை விளக்கும் வகையில் ஒளி-ஒலி காட்சி நடந்தது.
ராணுவ கண்காட்சியை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
போர் விமானத்தில் நிகழ்த்திய வீரர்களின் சாகசங்களையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ராணுவ தளவாடங்களையும் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பிரதமர் மோடி நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் நாளை வருகிறார். அவரது ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக கண்காட்சி மைதானம் அருகே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் முப்படைகளின் தளவாடங்களது செய்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும். இதில் பிரதமர் மோடியுடன் வர்த்தக ரீதியிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்கள்.
ராணுவ வர்த்தகம் தொடர்பான கருத்தரங்குகளையும், பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனை உலகுக்கு பறை சாற்றுவதாகும். 1999-ம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 10-வது கண்காட்சி ஆகும்.
இன்று முதல் 4 நாட்களுக்கு நடை பெறும் கண்காட்சியில் வெளிநாட்டு, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவார்கள். இறுதி நாளான 14-ந்தேதி மட்டுமே பொது மக்களுக்கு கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
இந்தியாவின் ராணுவ தளவாட கண்காட்சி இது வரை டெல்லி, கோவா உள்பட வட மாநிலங்களில் தான் நடைபெற்று வந்தது. தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று நான் கூறினேன். இதைத் தொடர்ந்து முதல் முறையாக ராணுவ தளவாட கண்காட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.
தமிழர்களின் கலை பண்பாட்டை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ள சிற்பக்கலை மிக்க நகரமான மகாபலிபுரத்தில் இந்த கண்காட்சி நடைபெறுவது சிறப்பு அம்சம் ஆகும். எங்களது வேண்டுகோளை ஏற்று இதில் கலந்து கொண்டுள்ள உள்நாட்டு, வெளி நாட்டு பிரதிநிதிகளை வரவேற்கிறேன். நீங்கள் நேரம் கிடைக்கும் போது மகாபலிபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களை சென்று பார்வையிடலாம். அதற்கு ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராணுவ தளவாட கண்காட்சியை கடைசி நாளான 14-ந்தேதி மட்டுமே பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் கண்காட்சியையொட்டி சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதனை பொது மக்கள் 13-ந்தேதியும், 15-ந்தேதியும் சென்று பார்வையிடலாம். இதற்கான அனுமதி இலவசம். போர்க்கப்பல்களை பார்வையிட விரும்பும் பொது மக்கள் தீவுத்திடலில் இருந்து கடற்படை ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் கப்பல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கப்பல்களை பார்வையிடலாம்.