பிரமாண பத்திரம் தாக்கலை விமர்சிப்பதா?: கே.பி.முனுசாமிக்கு தீபா பேரவை கண்டனம்

தேர்தல் ஆணையத்திடம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளதற்கு தீபா பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரமாண பத்திரம் தாக்கலை விமர்சிப்பதா?: கே.பி.முனுசாமிக்கு தீபா பேரவை கண்டனம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் (எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை) தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஆலோசனைப் படி தலைமை தேர்தல் ஆணையரிடம் உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்று பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்துள்ளோம். மேலும் பல லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளோம்.

ஓ.பி.எஸ்., சசிகலா அணியினரை விட பல லட்சக்கணக்கான உண்மையான தொண்டர்களின் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து அ.தி.மு.க. எங்களுக்கே சொந்தம் என்பதை நிரூபணம் செய்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெ.தீபா பதவி ஏற்பது உறுதி, அ.தி.மு.க. தொண்டர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ள ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி முதிர்ச்சியற்ற முறையில் ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்பதற்கேற்ப பேசி உள்ளார். அ.தி.மு.க.விற்கும் தீபா பேரவைக்கும் என்ன சம்பந்தம் என்று அவர் கேட்டிருப்பது சரி அல்ல.

ஒரே நாளில் அம்மாவால் அமைச்சர் பதவியிலிருந்து அனைத்து பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் கே.பி.முனுசாமி போன்ற ஓரம் கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மற்றும் சசிகலாவால் பதவி பறிக்கப்பட்ட, பதவி இழந்தவர்கள் சங்கமாக சங்கமித்துள்ள ஓ.பி.எஸ். அணியை எப்படி அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? மீண்டும் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திட மனப்பால் குடிக்கும் கே.பி.முனுசாமி போன்றவர்களின் கனவு பலிக்கபோவதில்லை. அவரது தவறான கருத்திற்கு அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் தொண்டர்கள் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com