லண்டன் கட்டட தீ விபத்து: உயிரிழப்பு 30-ஆக உயர்வு - இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி

லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
லண்டன் கட்டட தீ விபத்து: உயிரிழப்பு 30-ஆக உயர்வு - இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி
Published on

லண்டன்:

லண்டனின் வடக்கு கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக்  குடியிருப்பில் கடந்த புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தில் உள்ள 120 பிளாட்டுகளிலும் வசித்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த தீ விபத்தில் முதற்கட்ட நிலவரப்படி 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 17ஆக உயர்ந்து இருந்தது. 

இந்நிலையில், கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 24 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 12 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வந்ததாகவும், தற்போது தான் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

இதனிடையே, லண்டன் கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நகரவாசிகள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com