

வேலூர்:
‘ஆதரவற்றவர்களாக பிறக்கலாம், ஆனால் இறக்க கூடாது’. இன்றைய வாழ்க்கை முறையில் ‘மனிதம்’ என்ற மனநிலை மண்ணோடு புதைக்கப்பட்டுள்ளது. இரக்கமற்ற செயல்கள் நடக்கும் போது மட்டும் ஒரு நொடி வருத்தம் தெரிவிப்பது, ‘மனிதநேயம்’ இல்லை.
அப்படி, மனித நேயமற்ற செயல்கள் ஒவ்வொரு முறை அரங்கேறும் போதும் சமூகத்தின் மீது விழும் ‘சாட்டை அடியாக பார்க்கப்படுகிறது. ‘பாவம், அய்யோ பரிதாபம்’ என்று கண்முன் நிறுத்தி கதற வைக்கிறது, ஒரு லட்சாதிபதி சவ ஊர்வலம்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 70). இவருக்கு ஊன்று கோலாக இருந்த மனைவி இறந்து விட்டார். அரவணைத்து ஆதரிக்க வேண்டிய பிள்ளைகளும் ராஜாராமை புறக்கணித்து தூக்கி எறிந்தனர்.
பிறகு, தனது வீட்டை விற்று லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வங்கியில் ‘டெபாசிட்’ செய்துவிட்டார். அந்த பணத்தையும் தனக்கு நெருக்கமானவர்கள் அபகரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் வெளியில் சொல்லவில்லை.
லட்சக்கணக்கில் பணம் இருந்தும், ‘பந்த பாசம் கிடைக்காத ஏக்கத்திலும், கவனிக்க ஆள் இல்லாததாலும் பிச்சை எடுத்தார். வீதியில் தூங்கி ‘துறவி’ வாழ்க்கையை மனம் நொந்து அனுபவித்தார்.
இந்நிலையில் கடந்த 27-ந்தேதி ராஜாராம் திடீரென உயிரிழந்தார். ராஜாராமுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி உதறி தள்ளிய அவரது உறவினர்கள் பிணத்தையும் வாங்க மறுத்தனர்.
சோளிங்கர் போலீசார் அனாதை பிணம் என்று பேரூராட்சி ஊழியர்களின் ஓத்துழைப்புடன், குப்பை அள்ளும் வண்டியில் திறந்த நிலையில் ராஜாராமின் உடலை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
உடலை கொண்டு சென்ற காட்சியை செல்போனில் சிலர் போட்டோவாகவும், வீடியோவாகவும் வாட்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ‘மனிதநேயம் எங்கே போனது’ என்று விமர்சனத்துக்கு உரிய பொருளாக மாறியுள்ளது.
லட்ச ரூபாய் இருந்தும் பிச்சை கேட்டு மடிந்து போன ராஜாராமை உற்றார், உறவினர், குடும்பம் என அனைவரும் கைவிட்டாலும் அவரை கடைசி வரை சுமந்து சென்று சேர்த்தது அந்த பேரூராட்சி ஊழியர் மட்டுமே.
அதே நேரத்தில் உடலை கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் கூட இல்லையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி கண்டித்து வருகின்றனர். #Tamilnews