பாகிஸ்தானில் தாவுத் இப்ராகிம் மகன் இஸ்லாமிய மதகுரு ஆனார்

மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமின் மகன், மொயின் நவாஸ் டி கஸ்கர் பாகிஸ்தானின் கராச்சியில் முஸ்லிம் மதகுரு ஆகிவிட்டார்.
பாகிஸ்தானில் தாவுத் இப்ராகிம் மகன் இஸ்லாமிய மதகுரு ஆனார்
Published on

கராச்சி:

மும்பை நிழல் உலக தாதா ஆக இருந்தவர் தாவுத் இப்ராகிம். மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான இவர் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் கராச்சியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

அவரை ஒப்படைக்கும்படி இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் அபாண்டமாக மறுத்து வருகிறது. இவர் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாவுத் இப்ராகிமுக்கு மொயின் நவாஸ் டி கஸ்கர் (31) என்ற மகனும், மக்ரூக், மக்ரீன் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மொயின் நவாசுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

மகள் மக்ரூக் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித்மியான்டட் மகனை திருமணம் செய்துள்ளார். மற்றொரு மகள் மக்ரீன் அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகரின் மகனை மணந்துள்ளார்.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிமின் மகன் மொயின் நவாஸ் டி கஸ்கர் பாகிஸ்தானின் கராச்சியில் முஸ்லிம் மதகுரு ஆகிவிட்டார். கராச்சியில் கிளிப்டன் பகுதியில் உள்ள தனது பங்களாவில் இருந்து வெளியேறிவிட்டார்.

அங்குள்ள பள்ளிவாசல் அருகே நிர்வாகம் வழங்கிய குடியிருப்பில் தனியாக தங்கியுள்ளார். இவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இவருடன் இருக்கின்றனர். தந்தை தாவுத் இப்ராகிமின் சட்ட விரோத நடவடிக்கைகள் பிடிக்காததால் மொயின் நவாஸ் அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மகன் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் தாவுத் இப்ராகிம் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். இதனால் அவர் வருத்தமுடன் காணப்படுகிறார். இந்த தகவலை மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்ட தாவுத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரி பிரதீப் சர்மா கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com