கர்ப்பிணி மகளை காரில் கடத்திய பெற்றோர் உள்பட 6 பேர் கைது

லால்குடியில் இருந்து கர்ப்பிணி மகளை காரில் கடத்திய பெற்றோர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீதா சோப்ரா
கீதா சோப்ரா
Published on

லால்குடி:

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள பரமசிவபுரம் 8-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ஹரிஹரன்(வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவரும், மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாரிராஜன் மகள் கீதா சோப்ராவும்(19), காதலித்து கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டு, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கீதா சோப்ரா தனது கணவர் வீட்டாருடன் சென்றார்.

தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள கீதா சோப்ரா நேற்று காலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது காரில் வந்த கும்பல், வீட்டுக்குள் புகுந்து கீதாவை காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து ஹரிஹரன் லால்குடி போலீஸ் நிலையத்தில் ஹரிஹரன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கீதா சோப்ராவை அவரது பெற்றோர் உள்ளிட்ட கும்பல் கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து துவரங்குறிச்சி சோதனைச்சாவடியை அந்த கார் கடந்து செல்ல முயன்றபோது, ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளிட்ட போலீசார் கீதா சோப்ராவை கடத்திச்சென்ற கும்பலை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கீதா சோப்ராவை கடத்தியது, அவரது தந்தை மாரிராஜன்(57), தாய் விஜயகுமாரி(43) மற்றும் அவரது உறவினர்கள் மதுரையை சேர்ந்த கார்த்திக்(21), குமரேசன்(22), கார் டிரைவர் தினேஷ்(23) மற்றும் லால்குடியை சேர்ந்த உடையன்னசாமி(48) என்பதும், கீதா சோப்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டது பிடிக்காத காரணத்தால், அவரை காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

பின்னர், மாரிராஜன் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com