

சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், சரவணன் (33) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சரவணன், மணஞ்சேரி கிராமத்தை சேர்ந்த தமிழழகி (30) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
சரவணன், வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் கூலிவேலை செய்து வந்ததால் வீட்டு வாடகை கொடுக்க சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த 7-ந் தேதி சரவணன், தமிழழகி மற்றும் அவரது அண்ணன் மகேஷ் ஆகியோர் தேவனாஞ்சேரிக்கு சென்று ராமச்சந்திரனை சந்தித்தனர். அப்போது வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் கொட்டகை போட்டு வசிக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
இதில் திடீரென ராமச்சந்திரனும், தமிழழகிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், அருகில் கிடந்த கம்பை எடுத்து தாக்கினார். அப்போது தமிழழகியும் ஆத்திரத்தில் செங்கல்லை எடுத்து ராமச்சந்திரனை நோக்கி வீசினார். இதில் செங்கல் அவரது முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சுவாமிமலை போலீஸ் இன்ஸ் பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ் பெக்டர்கள் ராஜ்குமார், திருவேங்கடம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக தமிழழகியின் அண்ணன் மகேசை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் தமிழழகியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.