புனேயில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலி: மும்பையிலும் வன்முறை வெடித்தது

புனேயில் போர் நினைவு தின கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலியானார். இதனால் மும்பையிலும் வன்முறை வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். #Pune #Dalityouth
புனேயில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலி: மும்பையிலும் வன்முறை வெடித்தது
Published on

மும்பை:

புனேயில் போர் நினைவு தின கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் பலியானார். இதனால் மும்பையிலும் வன்முறை வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், 1818-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கும், மராட்டியத்தை சேர்ந்த பேஷ்வா படையினருக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில், கிழக்கிந்திய கம்பெனி, பேஷ்வா படையை தோற்கடித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. கிழக்கிந்திய கம்பெனி வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் மராட்டியத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் அந்த போரின் 200-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் ராகுல் (வயது 28) பலியானார். போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினார்கள். இதன் காரணமாக மும்பை செம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. மாநிலம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

#TamilNews #Pune #Dalityouth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com