

அகமதாபாத்:
குஜராத்தில் தார்பர் இன ஆண்கள் மிகப்பெரிய மீசை வைத்துள்ளனர். அவர்களை போன்று மீசை வளர்க்கும் தலித் இனத்தவர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் மீசையை துண்டித்தும், அகற்றியும் அராஜகம் செய்கின்றனர்.
கடந்த 25-ந்தேதி காந்திநகர் அருகே உள்ள லிம்போதரா கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் பியூஸ் பார்மர்(25) தார்பர் இனத்தவரால் தாக்கப்பட்டார். அவரது மீசையும் துண்டிக்கப்பட்டது.
இதேபோல மற்றொரு சம்பவம் அதே கிராமத்தில் நடந்தது. கிருனாஸ் மகேரியா என்ற 30 வயது தலித் இளைஞர் ரோகித்வாஸ் என்ற இடத்தில் தனது நண்பரை பார்க்க சென்றார்.
அவரை தார்பர் இனத்தவர் சிலர் வழிமறித்தனர். மீசை வளர்த்திருந்த மகேரியாவை அடித்து உதைத்தனர். மீசையையும் துண்டித்து அவமானப்படுத்தினர்.
இதுகுறித்து காந்தி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே தலித் இளைஞர்கள் அகமதாபாத் மற்றும் காந்திநகர் மாவட்டங்களில் ‘டுவிட்டர்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீசையால் ஏற்பட்ட அவமானம் குறித்து பிரசாரம் செய்தனர்.
அப்போது மீசையை முறுக்கி விட்டபடி செல்பி எடுத்து போட்டோவை வெளியிட்டனர். ‘மீசை வளர்ப்பது எங்களின் அரசியல் உரிமை’ என அதில் பதிவு செய்தனர்.
இதற்கிடையே லிம்போதரா கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் குல்தீப் மெகரியா தன்னை கோவிலுக்குள் அனுமதித்து விட்டு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க தார்பார் இனத்தவர் அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
மேலும் தலித் மணமகன் தனது திருமணத்தின் போது குதிரை மீது ஏறி அமர்ந்து ஊர்வலம் செல்லவும் உயர்ஜாதி என கூறிக்கொள்ளும் தார்பர் இனத்தவர் அனுமதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.