மேனகா காந்தி மரியாதை செலுத்திய பின்னர் அம்பேத்கர் சிலையை பாலால் கழுவிய தலித் மக்கள்

குஜராத் மாநிலத்தில் மத்திய மந்திரி மேனகா காந்தி மற்றும் பா.ஜ.க.வினர் மரியாதை செலுத்திய பின்னர் அம்பேத்கர் சிலையை தலித் மக்கள் பாலால் கழுவி சுத்தப்படுத்தினர். #Manekagandhi
மேனகா காந்தி மரியாதை செலுத்திய பின்னர் அம்பேத்கர் சிலையை பாலால் கழுவிய தலித் மக்கள்
Published on

அகமதாபாத்:

இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் வதோதரா நகர மேயர் பாரத் தன்கர், மத்திய மந்திரி மேனகா காந்தி, உள்ளூர் பா.ஜ.க. எம்.பி. ராஜன்பென் பாட், பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ் பட்டேல் மற்றும் ஏராளமான பா.ஜ.க. பிரமுகர்களும், தொண்டர்களும் இன்று காலை சுமார் 9 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரில் குதிரை ரேஸ் மைதானத்தின் அருகேயுள்ள ஜி.ஈ.பி. சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

ஆனால், அவர்கள் வருவதற்கு முன்னதாக அங்கு பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக ஊழியர்கள் (எஸ்.சி., எஸ்.டி. பிரிவு) சங்கத்தின் பொதுச் செயலாளர் தாக்கோர் சோலாங்கி தலைமையில் ஏராளமானவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக காத்திருந்தனர்.

அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வதோதரா மேயர் மற்றும் மத்திய மந்திரி மேனகா காந்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்த பின்னர்தான் உங்களை அனுமதிக்க முடியும் என அவர்களிடம் கூறியதால், அங்கு காத்திருந்தவர்கள் ஆவேசம் அடைந்தனர்.

இதனால் போலீசாருக்கும் அங்கு கூடியிருந்த தலித் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பலத்த பாதுகாப்புடன் வந்த வதோதரா மேயர் மற்றும் மத்திய மந்திரி மேனகா காந்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர்.

அவர்களின் வருகையால் அந்த இடத்தின் சுற்றுச்சூழல் மாசுபட்டதாக கூறிய சிலர் அம்பேத்கர் சிலையை பால் மற்றும் தண்ணீரால் கழுவிய பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #Manekagandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com