

ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள் உள்ளிட்ட மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்காக தேசிய அளவில் ஜெஇஇ என அழைக்கப்படும் கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், ஒடிசாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பிகாஷ் தாஸ் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 582-வது இடத்தைப் பிடித்துள்ள இவர், ஐ.ஐ.டி.யில் சேர தகுதி பெற்றுள்ளார்.
பெற்றோரின் ஆதரவு மற்றும் கடின உழைப்பே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் மாணவர் பிகாஷ் தாஸ். குறிப்பாக தன் தந்தை பிஜோய் தாஸ், வறுமையை தன்னிடம் எப்போதும் காட்டிக்கொண்டதில்லை என்றும், இன்று இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அவர் மட்டுமே காரணம் என்றும் பிகாஷ் கூறுகிறார்.