14 வயதுக்கு குறைவானவர்கள் உறியடியில் பங்கேற்க முடியாது: அரசின் அறிக்கையை ஏற்றது மும்பை ஐகோர்ட்

உறியடி திருவிழா கட்டுப்பாடுகள் தொடர்பாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்ற மும்பை ஐகோர்ட், 14 வயதுக்கு குறைவானவர்கள் உறியடியில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளது.
14 வயதுக்கு குறைவானவர்கள் உறியடியில் பங்கேற்க முடியாது: அரசின் அறிக்கையை ஏற்றது மும்பை ஐகோர்ட்
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறும் உறியடி கொண்டாட்டத்தில் (தஹி ஹண்டி) கலந்து கொள்வோரின் வயது, மற்றும் உறியின் உயரம் ஆகியவை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

18 வயதுக்கு உட்பட்டோர் இந்த மனித கோபுரத்தில் கலந்துக் கொள்ளக்கூடாது. மனித கோபுரம் அதிக உயரத்தில் அமைப்பதால் பாதிப்பு ஏற்படும் என்பதால் உறியின் உயரத்தை குறைக்கவேண்டும். மனித கோபுரத்தின் உயரம் 20 அடியை தாண்டக்கூடாது என விதிமுறைகளை விதித்தது.

இதனை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதேசமயம், உறியடி தொடர்பாக மும்பையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். பாதுகாப்பு பிரச்சனை இருப்பதாகவும், சிறுவர்களை உறியடி திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதாவது, 14 வயதுக்கு கீழே உள்ளவர்களை உறியடியில் பங்கேற்க அனுமதி இல்லை என்ற அரசின் உத்தரவாதத்தை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டது. அதே சமயம், மனித கோபுரத்தின் உயரம் தொடர்பாக கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, மனித பிரமிடுகளின் உயரம் தொடர்பாக எந்த கட்டுப்பாடும் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com