பாபநாசம் அருகே சிலிண்டர் வெடித்து 12 வீடுகளில் பயங்கர தீ விபத்து

பாபநாசம் அருகே இன்று காலை சிலிண்டர் வெடித்து 12 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் அருகே சிலிண்டர் வெடித்து 12 வீடுகளில் பயங்கர தீ விபத்து
Published on

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி கீழவங்காரம் பேட்டையில், முஸ்லீம் தெரு உள்ளது. இந்த பகுதியில் அப்துல் லதீப் (வயது 70) என்பவர் வீட்டில் இன்று காலை லேசான தீ விபத்து ஏற்பட்டது. உடனே காற்றில் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் தீ விபத்தில் அடுத்தடுத்த வீடுகளில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ கட்டுக்கடங்காமல் பரவியாதல் அப்துல் லதீப் வீடு அருகே உள்ள பாத்திமா பீவி (50), காதர்மைதீன் (70), ஜாகிர் உசேன் (45), பேகம் (40), சேக்நூர்தீன் (60), நாசர்அலி (50), மதினாபேகம் (35), அசரப்அலி (45), சேக் உசேன் (45), லெனின் (65) ஆகியோரின் வீடுகள் தீயில் முழுவதும் எரிய தொடங்கியது.

இதனால் 12 பேரின் வீடுகளும் தீயில் எரிந்து முழுவதும் நாசமானது. வீடுகளில் உள்ள முக்கிய சான்றிதழ்கள், ஆதார்கார்டு, ரேசன் கார்டு, பணம் நகைகள் என முழுவதும் எரிந்து கரிகியது. இதன் மொத்தம் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீ விபத்து குறித்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பாபநாசம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து தஞ்சை கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே கலெக்டர் அண்ணாதுரை, கும்பகோணம் சப்-கலெக்டர் பிரதீப்குமார், பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com