

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரபிக் கடலில், லட்சத் தீவு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இதற்கு, 'டவ்-தே' என பெயரிடப்பட்டது.
இந்த புயல், அதி தீவிர புயலாக மாறி, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா கடற்பகுதியை நெருங்கியது. இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன், கனமழை பொழிந்தது. பலத்த காற்றும் வீசியது.
இந்நிலையில் குஜராத்தின் போர்பந்தர் - மதுவா பகுதியில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, இன்று இரவு சுமார் 9 மணியளவில் குஜராத்தில் புயல் கரையை கடக்க தொடங்கியது. முழுமையாக கரையை கடக்க 2 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.