‘மகா’ புயல் விலகி சென்றது - தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த மகா புயல் தமிழகத்தை விட்டு விலகி லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகா புயல்
மகா புயல்
Published on

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறியுள்ளது. இதன் கடந்த காரணமாக தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் ‘மகா’ புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக்கடலில் லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘மகா’ புயல் தீவிர புயலாக மாறி உள்ளது.

இது இன்று அதிகாலை காலை 5.30 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு வடமேற்கு திசையில் உள்ளது.

இது தமிழகத்தை விட்டு விலகி செல்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வருகிற 4-ந் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com