கம்பம் அருகே தலை, கை, கால்களை துண்டித்து வாலிபர் கொலை

கம்பம் அருகே தலை, கை, கால்களை வெட்டி உடலை மட்டும் சாக்குப்பையில் வைத்து வீசிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு தொட்டாந்துறை பகுதியில் ரத்தக்கறையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு நேற்று இரவு 11 மணிக்கு தகவல் கிடைத்தது. இப்பகுதி முல்லைப் பெரியாறு செல்லும் பகுதியாகும். தற்போது அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் குறைவாகவே செல்கிறது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதில் தலை, கைகள், கால்கள் இல்லாத நிலையில் உடல் பகுதி மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். உடலில் எந்த வித ஆடையும் இல்லை. அவரை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடலில் மற்ற பாகங்கள் அதே பகுதியில் எங்காவது வீசப்பட்டுள்ளதா? என போலீசார் தேடிப்பார்த்தனர்.

ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி இங்கே வந்து வீசிச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை எரியூட்டி தகனம் செய்வது வழக்கம். எனவே கொலை செய்யப்பட்ட வாலிபரையும் எரிப்பதற்காக கொண்டு வந்த போது ஆட்கள் யாரேனும் வந்ததை பார்த்து அப்படியே வீசிச் சென்றார்களா? என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கம்பம் வியாபார சந்தையாக இருப்பதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் கொலை செய்யப்பட்டவர் வெளியூரைச் சேர்ந்த நபரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அது சாக்கு மூட்டையில் கிடந்த உடலை முகர்ந்து பார்த்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. சம்பவ இடத்துக்கு அருகே ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் அதில் ஏதேனும் குற்றவாளிகளின் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் அடிக்கடி இது போன்ற கொடூர கொலைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கம்பத்தில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதே போன்று கை கால்கள் வெட்டப்பட்டு கொலை நடந்தது. தற்போது மீண்டும் அதே போன்று வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com